நாளை முதல் அதிரடியாக குறையும் விலை.. அமுல் நிறுவனம் அறிவிப்பு..!
நாளை ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரும் நிலையில், அமுல் நிறுவனம் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பால், நெய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 700 பொருட்களின் விலையை குறைக்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதுடன், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு பெருமளவில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பால், நெய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 700 பொருட்களின் விலையை குறைக்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை பட்டியலின்படி ஒரு லிட்டர் நெய் விலை 40 ரூபாய் குறைக்கப்பட்டு 610 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீஸ் ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டு 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
99 ரூபாய்க்கு விற்பனையாகும் 200 கிராம் உறைந்த பனீர் இனி 95 ரூபாய்க்கும், 62 ரூபாய்க்கு விற்பனையாகும் 100 கிராம் வெண்ணெய் 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் யூஎச்டி பால், ஐஸ்க்ரீம், சாக்லெட், அமுல் புரோட்டின் உள்ளிட்ட பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவாய் உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அமுல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






