--- --:--:-- --

ரேஷன் கடைகளில் சானிட்டரி நோப்கின்களை இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க உயர் நீதிமன்றத்தில் மனு..!

3

ரேஷன் கடைகளில், சானிட்டரி நேப்கின்களை மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்கக் கோரிய வழக்கில், டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்த போது, அதுபோல எந்த திட்டமும் இல்லை என பதிலளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

 

அதேபோல சுகாதாரத் துறை அளித்த பதிலில், மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டதன் மூலம், ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டம் ஏதும் அமலில் இல்லை என்பது தெளிவாகிறது என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் ஏழை பெண்கள், கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்க அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால், சமூக நலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Right Menu Icon