சாதாரண சளி, காய்ச்சல்… கொரோனா என்று கூறி, “கோடிகளில் கொள்ளை லாபம் பாா்க்கும்” திருப்பூர் தனியார் மருத்துமனைகள்!!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 30ஆயிரத்து 292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6025 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை 275 ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புயல் சின்னம் காரணமாக திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு தூரல் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சுற்றித்திரிந்தனர். போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோதும், பொய்யான காரணங்களை கூறி, தப்பி சென்றனர்.
இதேபோல், தினசரி மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகமாகி, கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்றது. இதுதவிர பருவநிலை மாற்றத்தால், பொதுமக்களுக்கு சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகளுக்கு சென்ற பொதுமக்களிடம் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கொரோனாவாக இருக்கலாம் என அச்சுறுத்தி, பல்வேறு சோதனைகளை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், எனக்கு சளி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர் கொரோனா அரிகுறியாக இருக்கலாம் எனக்கூறி பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாக கூறி, என்னை மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கும்படியும் முன்பனம் கட்டவேண்டும் எனவும் கூறினர்.
என்னிடம் அவர்கள் கூறிய அளவு பணம் இல்லை எனக்கூறிவிட்டு, வீட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டேன். இரண்டுநாட்களுக்கு பின் தற்போது எனக்கு சளி உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை. தற்போது நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இதுபோன்று பொய்யான தகவல்களை கூறி அப்பாவி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தவிர கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளிடம் பணம் இருக்கும் வரை சிகிச்சை அளித்து விட்டு, இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடடைபெற்ற அமைச்சர் கலந்து கொண்ட ஆய்வுகூட்டத்தில் திருப்பூர் எம்பி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.




