நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு..!
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதிட்டார்.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ், போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்த தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
கைதுக்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார்.ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞர், வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது காவல் துறையினர் கைது செய்ததாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்.






