--- --:--:-- --

ஓலா, ஊபர், ராபிடோவில் கட்டண உயர்வுக்கு வரம்பு..!

8

லா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் பயணங்களுக்கு அதிக கட்டணம் செலுத்துவதில் சோர்வடைந்த மக்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் கட்டண உயர்வுக்கு வரம்புகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

உச்ச விலையை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைப் பற்றிப் பேசிய நிதின் கட்கரி, பாரத் டாக்ஸி ஆப்-க்கான சோதனை மற்றும் ட்ரையல் கட்டம் தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார். கூட்டுறவு மாதிரியின் மூலம் வண்டி ஓட்டுநர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த ‘பாரத் டாக்ஸி ஆப்’ செயலி சஹாகர் டாக்ஸி கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் (எஸ்.டி.சி.எல்) என்ற பெயரில் செயல்படும் என்று நிதின் கட்கரி வியாழக்கிழமை (டிசம்பர் 11) மக்களவை உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

 

நிதின் கட்கரி புதன்கிழமை முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, புதியதாகப் பரிந்துரைக்கப்பட்ட இந்த வணிக மாதிரி, ஒரு ஓட்டுநர்- உரிமையாளர் கூட்டுறவு மாடலின் அடிப்படையில் செயல்படும். இது ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான அக்ரிகேட்டர் மாடல் அல்ல. இந்த நடவடிக்கை பெரிய போக்குவரத்து சேவை ஒருங்கிணைப்பாளர்களின் வருவாயில் இருந்து சில பணத்தை எடுத்து, ஓட்டுநர்களின் வருவாயில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தச் செயலி சார்ந்த வண்டி சேவைகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் மோட்டார் வாகன அக்ரிகேட்டர் வழிகாட்டுதல்கள் 2025-ஐ வெளியிட்டுள்ளது என்று நிதின் கட்கரி மேலும் கூறினார். பயணிகளுக்கான பாதுகாப்பைத் தவிர, இந்தக் வழிகாட்டுதல்கள் கட்டண ஒழுங்குமுறையையும் வழங்குகின்றன.

 

அரசாங்கம் நினைத்திருக்கும் விலை வரம்புகளைப் பற்றி விவரித்த கட்கரி, உச்ச நேரங்களில் கட்டண உயர்வை மாநிலத்தால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகையைப் போல இரு மடங்குக்கு மிகாமல் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கீழவையில் தெரிவித்தார்.

 

“வழிகாட்டுதல்கள் டைனமிக் விலையை எதிர்பார்க்கின்றன, அக்ரிகேட்டர்கள் மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட அடிப்படைக் கட்டணத்தை விட 50 சதவிகிதம் குறைவாகக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கின்றன. அதேசமயம் உச்ச நேரங்களில் அதிகபட்ச கட்டண உயர்வை அடிப்படைக் கட்டணத்தைப் போல இரு மடங்காக கட்டுப்படுத்துகின்றன” என்று அமைச்சர் கூறினார்.

 

இந்த விதிகள் எளிமையான, லேசான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இது இன்னும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும், ஓட்டுநர்களின் நலனைப் பாதுகாக்கும் மற்றும் அக்ரிகேட்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அடிப்படைக் தரங்களை அமைக்கும். அத்தகைய அக்ரிகேட்டர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரம், அந்தந்த மாநில அரசாங்கத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆவார்.

 

இந்த விதிகளின்படி, ஓட்டுநருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களுக்கு பயணக் கட்டணத்தில் குறைந்தது 80 சதவிகிதம் கிடைக்கும். அதே சமயம், போக்குவரத்து சேவை ஒருங்கிணைப்பாளருக்கு சொந்தமான மோட்டார் வாகனங்களுக்கு, அதில் உள்ள ஓட்டுநருக்கு பயணக் கட்டணத்தில் குறைந்தது 60 சதவிகிதம் கிடைக்கும்.

 

“பயணத்தைப் பெறுவதற்கான தூரம் மூன்று கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தால் தவிர, ஓரிடத்தில் இருந்து சென்றடையும் இடம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எந்தவொரு பயணிக்கும் ‘டெட் மைலேஜ்’-க்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை வழிகாட்டுதல்கள் உறுதி செய்கின்றன” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 

சமீபத்திய மோட்டார் சேவை வழங்கும் ஒருக்கிணைப்பாளர்கள் கொள்கைக்கு இணங்க, ஒரு தேசிய செயலி அடிப்படையிலான வண்டி அழைப்பு சேவையான ‘பாரத் டாக்ஸி’ விரைவில் அரசாங்கத்தால் தொடங்கப்படும், மேலும் இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

 

கூட்டுறவு அடிப்படையிலான ‘பாரத் டாக்ஸி’ அழைப்புச் சேவையை நிறுவுவதில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) முக்கியப் பங்காற்றுகிறது. புதிய பல்-மாநில கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் ஓட்டுநர் சேர்க்கை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நடந்து வருகின்றன என்று அரசாங்கம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon