--- --:--:-- --

யார் பெயரும் விடப்படாது – தலைமை தேர்தல் அதிகாரி

3

யார் பெயரும் விடப்படாது. நீக்கப்படும் பெயர்கள் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்காதவர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வெளியிடப்படும்” என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது; “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6.46 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 96.22 சதவிகிதம், அதாவது 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் கொடுக்கப்பட்டு விட்டது. அதில் 50 சதவிகிதம் படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு தகுதியான வாக்காளர் பெயரும் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்ற அடிப்படையில் தான் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணியில் நான் உட்பட 83 ஆயிரம் பணியாளர்கள், 33,000 தன்னாளர்கள் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜென்ட்கள் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை படிவங்கள் கொடுக்கலாம்.

 

யார் பெயரும் விடப்படாது. நீக்கப்படும் பெயர்கள் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்காதவர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வெளியிடப்படும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுத்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. அப்போது அவர் கொடுத்த தகவல்கள் சரியானதா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரி பார்த்து விடுவார்.

 

ஒருவேளை அந்தப் படிவத்தில் பிரச்சனை இருந்தால், தேர்தல் அதிகாரி ஆய்வு செய்வார். இருந்தாலும் வாக்காளர் கையெழுத்து போட்டு விட்டால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடும். அதில் தவறுகள், ஆட்சேபனைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் ஆவணங்கள் கேட்டு நோட்டீஸ் கொடுப்பர்.

 

ஆனால் இந்த பணி 8ஆம் தேதிக்கு பிறகு தான் நடைபெறும். எனவே அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி தர வேண்டும். சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து வரும் புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு தெரிந்த தகவல்களை பூர்த்தி செய்துவிட்டு, கூடுதல் தகவல்களை உதவி மையங்கள் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டு பூர்த்தி செய்து படிவங்களை கொடுத்து விடுங்கள்.

2002, 2005 வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருந்தால் உங்கள் தகவல்களை மட்டும் கொடுத்தால் போதுமானது. ஒரு தொகுதிக்குள் இடம் மாறுதல் இருந்து, கண்டுபிடிக்க முடிந்தால் படிவங்களை கொடுத்து விடுகிறோம். வேறு தொகுதிக்கு மாறி இருந்தால் படிவம் 8 கொடுக்க வேண்டும்.

சென்னையை பொருத்தவரை 96.27 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. 50 சதவிகிதம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. அதில், 33.59 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைய வாயிலாக பதிவு செய்யப்படும் படிவங்களும், இந்த காலகட்டத்திற்குள் பரிசீலிக்கப்படும்.

படிவங்கள் திரும்ப கொடுத்து இருந்தால், கட்டாயம் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். ஒரு வாக்காளர் பெயர் இல்லை என்றால், எந்த காரணத்திற்காக அவர்களுடைய பெயர் இல்லை என்பதை வாக்குச்சாவடி வாரியாக தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Right Menu Icon