--- --:--:-- --

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்..!

1

வெகவில் இணைவதற்கு ஏதுவாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 

இதற்கிடையே, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்து பேசியதாகவும், ஓரிரு நாட்களில் விஜய்யுடன் பேசிய பிறகு தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

விஜய்யுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டையன், இன்று கோவையில் இருந்து சென்னைக்கு வருவதாகவும், தொடர்ந்து நாளை (26ஆம் தேதி) தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

நாளை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன், நாளை மறுதினம் (27ஆம் தேதி) விஜயை சந்தித்து அவர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்தும், செங்கோட்டையனும் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரும் 30ஆம் தேதி செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறார். அதற்கு முன்னதாக, செங்கோட்டையன் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Right Menu Icon