தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் முக்கிய மாற்றம்..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக தென் மாவட்ட ரயில்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புத்தாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் 30-ஆம் தேதி வரை மேலும், 4 ரயில்கள் சென்னை எழும்பூருக்குச் செல்லாது எனவும், தாம்பரம் வரையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை முதல் தஞ்சையில் இருந்து இரவில் புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூருக்குப் பதிலாக, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் நாளை மறுநாள், உழவன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூருக்குப் பதிலாக, தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை, மதுரை வழியாக சென்னை வரும் அனந்தபுரி அதிவிரைவு ரயில், தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனவும், மறுமார்க்கத்தில், நாளை மறுநாள், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து இரவு 8:20 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரும் சேது அதிவிரைவு ரயில், நாளை முதல் வரும் 29-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனவும், மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் முதல் சேது அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6:20 மணிக்கு புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து தஞ்சை வழியாக சென்னை வரும் விரைவு ரயில் நாளை முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணி 42 நிமிடங்களுக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து புறப்படுவதோடு, மறு மார்க்கத்தில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மும்பை CSMT வரை இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.






