செல்ஃபோன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளை
செல்போன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. லோன் விஷயமாக உங்களிடம் 5 நிமிடம் பேச வேண்டும் என்று கூறி உங்கள் ஏடிஎம் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் ஏடிஎம் கார்டில் உள்ள நம்பரை சொல்லுங்கள் என பேசிப்பேசியே மோசடியை அரங்கேற்றி விடுவர்.
இந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை தான் இப்பொழுது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்துள்ளனர். வங்கியிலிருந்து பேசுவது போல் நடித்து மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு புகார்கள் குவிந்தன. 200க்கும் மேற்பட்ட புகார்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
புகார் அளித்த வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை ஆய்வு செய்த போது தான் ஒரு விஷயம் போலீசாரின் கண்களுக்கு புலப்பட்டது. அதாவது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணம் அனைத்தும் மோபிக்விக் என்ற இணைய செய்தி வாயிலாகவே பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்திய போது தான் இதில் மேலும் பல உண்மைகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு வங்கி வருமான வரித்துறை ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்து பேசுவதுபோல் வாடிக்கையாளர் விபரங்களை பெற்றுக் கொண்டு அந்த விபரங்களை மோபிக்விக் என்ற செயலியில் பதிவு செய்வார்கள்.
இதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் ஓடிபி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பர் வந்திருக்கும் அதைக் கூறுங்கள் என்று கூறுவார்கள். இதனை அறியாத வாடிக்கையாளர்கள் அந்த ஓடிபி எண்ணை கூற அடுத்த நிமிடமே வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் உடனடியாக கொள்ளையடிக்கப்படும்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து மோபிக்விக் நிறுவனத்திற்கு விவரங்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். மோபிக்விக் அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லியிலுள்ள ஆர் கே புரம் எனும் பகுதியை சேர்ந்த வில்சன் என்பவரை கைது செய்தனர்.






