--- --:--:-- --

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய கோரிக்கை

1

ரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். விஜயின் தவெக சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயணன், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் வாதத்தை தொடங்கினர்.

 

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக, உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் கரூரில் நெரிசல் ஏற்பட்டதும் காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அங்கிருந்து சென்றதாகவும், எதிர்மனுதாரராக கூட இல்லாத விஜயைப் பற்றி உயர்நீதிமன்றம் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும் தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

 

அப்போது, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது எப்படி என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்றும் வினவியது. அதற்கு, பிரச்சாரங்கள் தொடர்பாக தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்துள்ள மனு தற்போது நிலுவையில் இருப்பதாக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

 

அப்படி வழக்கு நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பதாக சுட்டிக்காட்டிய வில்சன், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்தார். விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும் வில்சன் வாதிட்டார்.

 

இந்நிலையில், கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் இருந்து, தற்போது உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை. Exceptional வழக்குகளில்தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவுகள் உள்ளன.

 

அதேபோல், பிரபாகரன் எனும் மற்றொரு மனுதாரர், வாகன எண்கள் இல்லாத ஆம்புலன்ஸுகள் கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. செந்தில் பாலாஜியின் பெயர் பொறித்த வாட்டர் பாட்டில்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. விஜய் பரப்புரையில் திடீரென காவலர்கள் தடியடி நடத்தத் தொடங்கிவிட்டனர்.

 

விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படும் என 3.15 மணிக்கே திமுகவைச் சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். வேலுச்சாமிபுரத்தில் ஜனவரி மாதம் அதிமுக அனுமதி கேட்டபோது இறையூறு காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நள்ளிரவில் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என வாதம் முன் வைத்தார்.

 

இதற்கு விளக்கம் அளித்த நீதிமன்றம், சிறப்பு அனுமதி அல்லது உத்தரவுகள் அடிப்படையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான். உச்சநீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் உடற்கூறு ஆய்வு இரவில் நடத்தலாம். தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு கோரிக்கையை முன்வைத்தால், மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 4 மணி நேரத்தில் உடற்கூராய்வுகள் முடிக்கப்பட்டனவா, கரூர் அரசு மருத்துவமனையில் எத்தனை உடற்கூராய்வு மேடைகள் உள்ளன? என கேள்வி எழுப்பப்பட்டது.

 

மனுதாரர் தரப்பில் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக வாதம் வைக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் இருந்து, உயிரிழந்த சிறுவனின் தந்தையின் வலி உட்பட அனைவரின் வலியும் எங்களுக்கு புரிகிறது. ஆனால், கூட்டத்தில் ரவுடிகள் மற்றும் ஆளும் கட்சியினர் புகுந்ததாக கூறுவதை ஏற்கமுடியாது எனவும், இந்த விவகாரத்தில் சரியான தரவுகள் மற்றும் ஆதாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளோம் எனவும் வாதிடப்பட்டது.

 

இதனையடுத்து உச்சநீதிமன்றம், கரூர் சம்பவத்தில் பரஸ்பரம் குறை சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. கரூர் சம்பவத்தில் நடந்தது என்ன என்ற உண்மை வெளி வரவேண்டும். அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அரசின் வாதத்தையும், மனுதாரர்களின் வாதங்களை ஏற்று வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Right Menu Icon