--- --:--:-- --

ரஜினியுடன் இணையப் போவது எப்போது? கமல் சொல்வது என்ன?

kamal

தமிழகத்தின் நலனுக்காக தேவைப் பட்டால் இணைவோம் என்று தான் நானும், ரஜினியும் கூறியுள்ளோம். அது எந்த தேதியில் என் பதை இப்போது சொல்ல முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்த் திரையுலகில் 40 வருடங்களுக்கும் மேலாக தங்களுக்கான தனித்தனி பாணி நடிப்பில் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினியும் கமலும் ஆவர். திடீரென இப்போது இருவரும் அரசியலில் ஒன்றிணையப் போகிறோம் என அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்கியுள்ளது.

 

கமல் 60 விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குநரும், பிரபல நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இவர்களின் இணைப்புக்கு அச்சாரம் போடுவது போல் கொளுத்திப் போட்டார். கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதுதான் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நன்மையாக இருக்கும் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். அடுத்து இரண்டே நாட்கள் இடைவெளியில், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், தமிழகத்தின் நலனுக்காக, அவசியம் ஏற்பட்டால் இணையத் தயார் என்பதை கமலும், ரஜினியும் நேற்று மாலை ஒரு மணி நேர இடைவெளியில் அறிவித்தே விட்டனர். இதனால் தமிழகத்தில் இப்போது ஒரே பேச்சாக இருப்பது ரஜினியும் கமலும் இணையப் போவது எப்போது? என்பது தான்.

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கமல் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல், என் மீது நீங்கள் காட்டும் அன்பை, தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும். இனி வரும் நாட்களில் என்னுடைய உழைப்பிற்கான உரிய பலன் நிச்சயம் கிடைக்கும் எனக் கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

 

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், ரஜினியுடன் இணையப் போவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன் தான் முக்கியம். தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லியிருக்கிறோம்.தமிழக மக்களின் நலனுக்காக, தேவைப்பட்டால் இனணவோம் என்று இருவரும் கூறியுள்ளோம். எந்த தேதியில் இணைவோம் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்து பேசினார். ஆனாலும் கமலின் பேச்சிலிருந்து இருவரும் இணையும் நிகழ்வு விரைவிலேயே அரங்கேறும் என்று தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon