மூன்றே நாளில் முடிந்த இந்தூர் டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!!
இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளில், இந்திய அணியின் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி 243 ரன்கள் எடுத்து சாதனை படைக்க,
நேற்றைய ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்திருந்தது. ஆட்ட முடிவில் ஜடேஜா (60), உமேஷ் யாதவ் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் வ.தேச அணியை விட 343 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டத்திலும் இந்தியா மேலும் ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் கோஹ்லியோ, வ.தேச அணியை வீழ்த்த 343 ரன்கள் முன்னிலையே போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். இதனால் இன்று காலை ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும் போதே, கெத்தாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இதனால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 343 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஆனால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வ.தேச விரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது வ.தேசம். அதன் பின்னர் ரஹீம் (64), லிட்டன்தாஸ் (35), ஹாசன் (38) ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ஆடினாலும், 213 ரன் களில் வ.தேச அணி ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
இந்தியத் தரப்பில் முகமது ஷமி (4), அஸ்வின் (3), உமேஷ் யாதவ் (2), இஷாந்த் (1) விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இரட்டை சதம் (243)விளாசி இந்தியாவின் அபார ரன் குவிப்புக்கு காரணமாக இருந்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் பகலிரவுப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி இந்தப் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.





