பாஜகவினருக்கு டெல்லி மேலிடம் போட்ட முக்கிய உத்தரவு..!
செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜக-வினருக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அடுத்தடுத்து அறிவித்தனர். இவை ஒருபுறமிருக்க முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனும் கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார். ஆனால் தனது முடிவில் உறுதியாக உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு கெடு விதித்த செங்கோட்டையனை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்.
இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியவர்களையும், செங்கோட்டையன் போன்ற அதிருப்தியாளர்களையும் தாங்கள் சந்திக்க வேண்டாம் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை அக்கரை பகுதியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தலில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், சிறிய பிரச்சனைகளில் ஒற்றுமையை இழந்து விடக்கூடாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி விவகாரம், உட்கட்சிப் பிரச்சனை போன்றவற்றைத் தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும் எனவும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-வை வலுப்படுத்துவது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் குஷ்பு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை விவரித்தார். தமிழ்நாட்டு மக்களிடம் பாஜகவை எடுத்துச் செல்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் குஷ்பு தெரிவித்தார்.






