ஜி.எஸ்.டி வரி குறைப்பு ஒரு புரட்சி – நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழா மதுரை சிந்தாமணியில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்க நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “டெல்லியில்கூட தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் அனைவருக்கும் தெரியும். சரியான நேரத்தில், சரியான கோரிக்கைகளை முன்வைத்து நுணுக்கங்களை எடுத்துச் சொல்லும் சங்கமாக இது பெயர் பெற்றுள்ளது. மாநில, மத்திய அரசுகளுடன் தொடர்பு கொண்டு வியாபாரிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவது பாராட்டத்தக்கது,” என்றார்.
அதேவேளை, ஜி.எஸ்.டி குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஜி.எஸ்.டி வரி குறைப்பு ஒரு புரட்சி. இது வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்ததுடன், பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுகிறது. வியாபாரிகள் எளிதில் புரிந்து செயல்படக்கூடிய வகையில் முறைமை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் வியாபாரிகளின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான திருத்தங்களை அரசு செய்து வரும்,” எனக் கூறினார். விழாவில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் நிதியமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.





