பெரும் மன உளைச்சல்.. அசோசியேஷன் மீது இயக்குநர் ராஜு முருகனின் மனைவி பகீர் புகார்!
பிரபல திரைப்பட இயக்குநர் ராஜு முருகனின் மனைவி ஹேமா சின்ஹா, தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “குக்கூ”, “ஜோக்கர்”, “ஜப்பான்” உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ராஜு முருகன் மற்றும் அவரது மனைவி ஹேமா சின்ஹா, ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்தக் குடியிருப்பு வளாகத்தில் சினிமா பிரபலங்கள் பலர் வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சில பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள் இங்கு நடைபெறுவதாக, அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் ஹேமா சின்ஹா முறையிட்டதாகத் தெரிகிறது. இதன்பின்னர், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பராமரிப்புத் தொகை கேட்டு டார்ச்சர் செய்ததாகவும், 20 நாட்களுக்கு மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் விட்டுச் செல்வதாகவும் ஹேமா சின்ஹா சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் வீட்டை விட்டு வெளியே சென்று வரும்போதெல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் ஹேமா சின்ஹா எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கத் தலைவர் மரியா ஷங்கர், செயலாளர் கௌரி சங்கர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.






