--- --:--:-- --

கோவை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி…குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 ற்கான கருத்துக்கேட்பு கூட்டம் காரமடை அருகே நடைபெற்றது !!!

8.3

கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக அரசு ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் 3 என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நில உரிமையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் காரமடையை அடுத்துள்ள திம்மம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்பத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன.இதனை தீர்க்கும் பொருட்டு பொதுமக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டது.

 

அப்போது,பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி இத்திட்டத்தை செயல்படுத்த அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் படி தேவையான நிலங்களை வழங்கும் நில உரிமைதாரர்களிடம் வழங்கப்படும் எனவும்,தற்போதுள்ள மார்க்கெட் நிலவரப்படி வழங்கப்பட மாட்டாது எனவும்,இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.பின்னர்,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விவேகானந்தன்,உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி,துணை வட்டாட்சியர் பாலமுருகன், மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜ்,முன்னாள் தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் உட்பட பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இத்திட்டம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில் ” பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் பகுதியில் உள்ள கதவணையில் துவங்கி அங்கிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மருதூர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு,பின்னர் அப்பகுதியில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 140 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்கத்தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்னர் கோவை மாநகராட்சிப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

 

கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது 16 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.2050 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை 33 லட்சமாக உயரும் எனவும்,இத்திட்டமானது முழுமையாக நிறைவு பெற்றால் வரும் 30 ஆண்டுகளுக்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon