--- --:--:-- --

காதலி தற்கொலை! காதலி சடலத்தை பார்க்க வந்த காதலன் கொலை!

6

புதுச்சேரியை அடுத்த பெரியகோட்டை குப்பத்தை சேர்ந்த ராகவன் ஹைதராபாத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தான். அவனும் சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த செவிலியராக பணிபுரிந்து வந்த அருணாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 

இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அருணாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த அருணா கடந்த 21ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருணாவின் தற்கொலையால் அவரது பெற்றோரும், உறவினர்களும் ராகவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

காதலியின் தற்கொலை குறித்து கேள்வியுற்று ராகவன் அவரது உடலை பார்க்க கோட்டகுப்பம் வந்துள்ளார். ராகவனை அருணாவின் உறவினர்கள் அவரை அங்குள்ள அய்யனார் கோவில் பின்புறம் ஆளரவமற்ற இடத்திற்கு கடத்திச் சென்று அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொன்றதாக கூறப்படுகிறது.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் ராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அருணாவின் அண்ணன் அருண்குமார் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அருணாவின் தாய்மாமன் ரமேஷ் என்பவனை தேடிவருகின்றனர். காதலியின் இறப்புக்கு வந்த காதலன் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Right Menu Icon