ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம்..!
சென்னையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி வீடுகளுக்கு குப்பை கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், வணிக இடங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், திரையரங்குகள் 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலும் செலுத்த வேண்டும்.
பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும், மருத்துவமனைகள் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளை கொட்டினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை தரம் பிரித்து அளிக்க தவறினால் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும், குப்பைகளை எரித்தால் 2000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.






