--- --:--:-- --

சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

3

சென்னை அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக கூறி நடிகர் துல்கர் சல்மானின் லேண்ட் ரோவர் காரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை எதிர்த்து துல்கர்சல்மான் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான், அந்த வாகனம் சட்டவிரோதமாக வாங்கப்பட்டது என்பதை நம்ப சுங்கத்துறை அதிகாரிகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்திருந்தால் நீதிமன்றம் தலையிடாமல் இருக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

 

அதிகாரியின் சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களை கூட சுங்கத்துறை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தது.

 

துல்கர் சல்மானின் காரை திருப்பி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் சுங்கத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், துல்கர் சல்மானை குற்றம்சாட்டப்பட்டவர் என குறிப்பிடக்கூடாது என்றும் நீதிமன்றம் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தது.

 

இந்நிலையில் தற்போது சென்னை அபிராமிபுரத்தில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை மற்றும் கேரளாவில் உள்ள 2 வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள வீட்டில் 2 துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் 8 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Right Menu Icon