--- --:--:-- --

திமுக – அதிமுக விமர்சனம்..!

2

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று, அதிமுகவால் அறிவிக்க முடியுமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் உடன் தான், தற்போது வரை திமுக கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக விமர்சித்துள்ளது.

 

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்பதை பிரதமர் மோடி வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

பின்னர், நேற்று மாலை, கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை குறித்து விளக்கம் அளிக்காமல் சென்றுவிட்ட பிரதமர் தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்துவிட்டதாக சாடினார். மேலும் பிரதமரை சந்திக்க தற்போது வரை நேரம் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

 

முன்னதாக, உதகை நிகழ்ச்சியில் பேசிய போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான், பாஜகவுடன் கூட்டணி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்க முடியுமா என முதலமைச்சர் சவால் விடுத்தார்.

 

பின்னர், இந்த காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர், இதற்கு விரைவில் விடை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கையெல்லாம் தெரியாது எனவும், அவர்களின் கூட்டணிக்கு கொள்கைகள் கிடையாது என்று விமர்சித்தார்.

 

இந்நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி என்று, மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்றும் அதிமுக வினவியுள்ளது. நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, அந்தக் கூட்டணியில் தானே திமுக தற்போது வரை அங்கம் வகித்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

Right Menu Icon