ஜெகன்மூர்த்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.யை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்துப் பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த கடத்தலுக்கும் ஏ.டி.ஜி.பி.-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏ.டி.ஜி.பி.- ஜெயராமனுக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.






