--- --:--:-- --

கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..!

1

மிழ்நாட்டில் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், காணொலி மூலம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக தீர்க்க வேண்டிய 3 பிரச்சனைகளை தீர்மானமாக இயற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 480 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், 10 ஆயிரம் கிராமங்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

அப்போது, கிராமப் பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும், கிராம நிர்வாகிகளை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திட்டங்களை தீட்டி திமுக அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறினார். மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் உடனடியாக தீர்க்க வேண்டிய 3 பிரச்னைகளை கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்யுங்கள் என்றார். மேலும் தண்ணீரை பணம் போன்று பார்த்து பார்த்து பயன்படுத்துமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

 

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமுலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய 5 கிராம மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மக்களின் பங்கேற்புடன் வளர்ச்சியை உறுதிசெய்வது தான் திராவிட மாடல் அரசு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கிராமத்தின் வலிமை தான், மாநிலத்தின் வலிமை என்றும் முதலமைச்சர் கூறினார்.

Right Menu Icon