15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், ஈரோடு, கோவை, தேனி, மதுரை, கரூர், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





