26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும்..!
தமிழ்நாடு முழுவதும் வரும் 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்து வாழ்க்கை கல்வியை அனுபவம் வாயிலாக தருவதற்கு புதிய திட்டமொன்றை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாணவர்கள் புத்தகப்பையை பள்ளிக்கு கொண்டு செல்ல தேவையில்லை.
வழக்கமான பாடங்களுக்கு பதிலாக மாடி தோட்டம் அமைத்தல், தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு நாளில் 12 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசு பொருட்கள் வழங்க ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்தகமில்லா தினத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.






