கொரொனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள்..!
பல மாநிலங்களில் கொரொனா நோயாளிகளிடம் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு கொரொனா நோயாளி ஒருவரை கொண்டு செல்ல 15 ஆயிரம் ரூபாய் வசூலித்த கொடுமை அரங்கேறியுள்ளது.
கொல்கத்தாவில் தனியார் ஆம்புலன்ஸ்கள் 5 கிலோமீட்டருக்கு எட்டாயிரம் ரூபாய் பறிப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர டிரைவர், உதவியாளர் ஆகியோருக்கு தனிநபர் பாதுகாப்பு கவசம் என்ற பெயரில் 3 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இதே மாநிலத்தில் 300 கிலோ மீட்டர் தூரம் செல்ல கொரொனா நோயாளி ஒருவரை கொண்டு செல்ல ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டதன் பேரில் ஒரு லட்சம் ரூபாய் திருப்பித் தரப்பட்டது.
அதேநேரம் கேரளா, கோவா, ஹிமாச்சல பிரதேசத்தில் அரசு ஆம்புலன்சுகள் இலவசமாக சேவை நடத்துகின்றன. ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறினாலும் இந்தியாவில் சில மாநிலங்களில் 21,000 பேருக்கு ஒன்று என்ற அளவில் அதிகமாக உள்ளது.






