--- --:--:-- --

அஜித்தின் இதயம், மூளையில் ரத்தக் கசிவு.. உடற்கூராய்வு ஆய்வில் தகவல்..!

3

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருப்பதுடன், இதயம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் உடற்கூராய்வு ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், அவர் எப்படியெல்லாம் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் என்கிற விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புற காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில், 12 சிராய்ப்பு காயங்கள் என்றும் மற்றவை அனைத்தும் ரத்தம் கன்றிய நிலையில் இருக்கும் காயங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையின் நடுப்பகுதி, மண்டை ஒட்டின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் கட்டையால் அடித்தது போன்ற பெரிய காயங்கள் இருந்துள்ளன. அதனால் மூளையின் வலது, இடது பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதயத்தின் பிரதான ரத்தக்குழாயில் இரு இடங்களில் ரத்தம் கசிந்திருக்கிறது. நுரையீரல், கல்லீரலிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இரு காதுகள், மூக்கிலும் ரத்தம் கசிந்திருக்கிறது. இரு கண்களிலும் வீக்கம் மற்றும் ரத்தக்காயங்கள் இருந்துள்ளன. இரு கால் மூட்டுப் பகுதிகள், கைகள், புட்டத்திலும் 6 பெரிய காயங்கள் என உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்துள்ளன.

 

அத்துடன் இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூட்டினால் சித்ரவதை செய்யப்பட்டது பற்றிய அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது. தலையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நாக்கை கடித்த நிலையில் இறந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அஜித்திற்கு தனிப்படை காவலர்கள் மிளகாய்ப் பொடி கலந்த நீரை கொடுத்தாக கூறப்படும் நிலையில், பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் வயிற்றில், உணவுடன் சேர்ந்து சரியாக செரிமானம் ஆகாமல் இருந்துள்ளதாகவும் உடற்கூராய்வில் தெரிய வந்திருக்கிறது.

Right Menu Icon