--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை – பாஜகவும் பங்கேற்பு

images (5)

உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாஜக, பாமக, தமாகா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இன்று 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தேர்தல் தொடர்பாக, ஏற்கனவே வெளியிட்ட பட்டியலை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது.புதிய அட்டவணையை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் தேதி ஓரிரு நாட்கள் தள்ளிப் போனாலும், நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

 

இதனால் ஊரகப் பகுதிகளில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன. இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்பதால், திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போதே தங்களுக்கு செல்வாக்கு உள்ள வார்டுகளை பட்டியலிட ஆரம்பித்துள்ளன.

 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக மேலிடம் இன்று தொடங்கியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

இந்த பேச்சுவார்த்தையில், தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோரும், பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தியும், தமாகா சார்பில் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், தங்கம் ஆகியோரும் பங்கேற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் சார்பிலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதால், கூட்டணி உறுதியாகியுள்ளது.

 

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி சதவீத அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேச்சு நடத்தி வார்டுகள் ஒதுக்கீடு செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon