மிரட்டும் சென்சார் புயல்..!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணித்துள்ளது.
இது வரும் நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என குறிப்பிட்டுள்ள வானிலை மையம், இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, சிங்கம் என பொருள்படும் ‘சென்யார் என பெயரிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் எனவும் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெயில் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.





