உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்- கோவா – கர்நாடக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்ச தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், ஆந்திரா – ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள், வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.





