காவலர் எழுத்துத் தேர்வில் தமிழ் கட்டாயம்..!
காவலர் எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. அரசு பணிகளில் சேருவதற்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் காவலர் தேர்வுகளில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் கொண்டுவந்துள்ளது.
அதன்படி தமிழ் தகுதித்தேர்வு 80 மதிப்பெண்களுக்கு தனியாக நடத்தப்படும் என்றும் அதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவலர் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்க்கும் பணி உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும் என்றும் தமிழ் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் காவலர் பணியில் தேர்ந்தெடுப்பதற்கு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ் தெரிந்த தகுதியான நபர்களா என தெரிந்து கொள்வதற்கான தேர்வு மட்டுமே என்றும் இது மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வில் விடைத்தாள் திருத்தப்படும் எனவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





