மனநலம் பாதிக்கப்பட்ட மகளை 7 ஆண்டுகளாக ஒரு அறையிலேயே அடைத்து வைத்த தந்தை..!
கர்நாடகாவில் கல்மனம் படைத்த தந்தையின் ஈவு இரக்கமற்ற செயலால் 7 ஆண்டுகளாக வெளிச்சத்தை பார்க்காமல் தனி அறையில் அடைக்கப்பட்டு இருளில் பரிதவித்த இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.
காலீபீடு கிராமத்தை சேர்ந்த தனிஜையா என்பவரின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தாயின் மறைவு மூத்த மகளின் மனதை பெரிதும் பாதித்தது மட்டுமின்றி மன நோயாளியாக மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மகளை சிகிச்சைக்காக சேர்த்தும் பலன் அளிக்காததால் அருகேயுள்ள ஒருஅறையில் அவரை அடைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் கடந்த 7 ஆண்டுகளாக சரியான உணவின்றி இருட்டு அறையில் தனிமையில் தவித்து வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறை உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





