ஹெலிகாப்டர் விபத்து : மீட்பு பணிக்கு முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் உதவியதற்காக தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்தது. கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் மீட்பு பணிகளில் உடனடியாகவும் நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய விமானப்படை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
துயரமான ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப்பணிகளின் போது காயம்பட்டவர்களை காப்பாற்றும் பணிகளிலும் உதவியதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவலர்கள் மற்றும் கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
விபத்து நடந்த உடனேயே கிராம மக்களும், காவலர்களும் விரைந்து சென்று உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கியதோடு அந்த பகுதி மக்கள் காயமடைந்தவர்களை விபத்து பகுதியில் இருந்து மீட்க உதவி இருந்தனர். விபத்து நடந்த உடனேயே நடைபெற்ற மீட்பு பணிகளில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறப்பு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சூழலில் விமானப்படை தனது நன்றியை தமிழக முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளது.






