கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் கணவரை காப்பாற்ற கோரி கதறும் மனைவி..!
மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் கணவரை காப்பாற்ற கோரி அவரது மனைவி கதறும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த தனபால் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வேலூர் அரசு மருத்துவமனையில் கொரொனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவரது மனைவி செண்பகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது கணவருக்கு கண்களில் ரத்தம் கசிந்து வருவதாகவும் உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது அவருக்கு ஏற்கனவே கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்துள்ளதாகவும் அதனை மருத்துவரிடம் மறைத்து சிகிச்சை பெற்றதாகவும் கூறுகின்றனர்.
இருந்தபோதிலும் உயர் சிகிச்சை அளிப்பதற்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.






