--- --:--:-- --

சீட் கிடைக்காததால் தமாகாவில் இருந்து கோவை தங்கம் விலகல்!

WhatsApp Image 2021-03-17 at 7.19.21 PM

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், தமாகாவில் இருந்து அதன் துணைத் தலைவரான கோவைத்தங்கமும், அவரது ஆதரவாளர்களும் இன்று திடீரென விலகினர்.

 

ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

அதிமுகவுடன் தமாகா கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்திய குழுவில், அதன் துணைத்தலைவரான கோவை தங்கம் இடம் பெற்றிருந்தார். வரும் தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஏற்கனவே 2001 மற்றும் 2006 தேர்தலில் வால்பாறையில் போட்டியிட்டார்.

 

ஆனால், இம்முறை வால்பாறை தொகுதியில் அதிமுகவே களம் காண்கிறது. தமாகா போட்டியிடாததால் கோவை தங்கம் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் தமாகாவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், வால்பாறை தொகுதி எனக்கு கிடைக்காததற்கு அமைச்சர் வேலுமணியே காரணம். ஜி.கே. வாசனும் என்னை கைவிட்டு விட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தமாகாவில் இணைந்ததற்கு இப்போது வருத்தப்படுகிறேன். இந்த தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றிபெற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர் என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

 

தமாகா முக்கிய பிரமுகரான கோவை தங்கத்தின் திடீர் விலகல், அக்கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon