தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? பிரதமர் இன்று ஆலோசனை!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், டில்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
இதையடுத்து, குஜராத்தில் 4 முக்கிய நகரங்கள், மகாராஷ்டிராவின் சில பகுதிகள், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அத்துடன் தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், மால்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழக தலைமைச் செயலாளர் நேற்று இதுகுறித்து காணொலி வாயிலாக, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த கூட்டம் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சூழலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணி நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவில், கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






