--- --:--:-- --

வாய் பிளக்க வைக்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு! சீமானின் ஆண்டு வருவாய் ரூ.1000 தானாம்!

Nomination

சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களில் சிலரின் சொத்து விவரங்கள் வாய் பிளக்க வைக்கும் வகையில் அதிகரித்துள்ளன. நாம் தமிழர் கட்சி சீமானோ, தனக்கு ஆண்டு வருமானமே வெறும் ரூ.1000 என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. இதில், முதல்வர் வேட்பாளர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் பலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அசொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:

 

எடப்பாடி பெயரில் நிலமில்லை!

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் வங்கிகளில் உள்ள இருப்பு என மொத்தம், 47 லட்சத்து, 64 ஆயிரத்து, 542 ரூபாய். முதல்வர் மனைவி ராதாவிடம் கையிருப்பு, 2 லட்சம் ரூபாய், புளுமெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வரவேண்டிய தொகை, 69 லட்சத்து, 36 ஆயிரத்து, 333 ரூபாய், வங்கிகளில் இருப்பு தொகை, 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 920 ரூபாய்.தங்க நகை, 720 கிராம், 30 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 1 கோடியே, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 631 ரூபாய் என, அசையும் சொத்து மதிப்பு மதிப்பாக காட்டப்பட்டுள்ளது.

 

கூட்டு குடும்பத்தின் பெயரில் கையிருப்பு, 11 லட்சம் ரூபாய், வங்கியில், 9 லட்சத்து, 21 ஆயிரத்து 96 ரூபாய், வர வேண்டிய நிலுவைத் தொகை, 30 லட்சம் ரூபாய் என, 50 லட்சத்து, 21 ஆயிரத்து, 96 ரூபாய் என, அசையும் சொத்து மதிப்பில் காட்டப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் எதுவும் முதல்வர் பெயரில் இல்லை. அவர் மனைவி ராதா பெயரில், 1 கோடியே, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. மனைவி ராதா வங்கியில், 14 லட்சத்து, 75 ஆயிரத்து, 453 ரூபாய் கடன் பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, இ.பி.எஸ்., மொத்த சொத்து மதிப்பு, 7 கோடியே 50 லட்சத்து 66 ஆயிரத்து 584 ரூபாய் உள்ளது என தெரிவித்து இருந்தார். ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட, 3 கோடி ரூபாய்க்கு, அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

 

வீடு இல்லாத ஓ.பி.எஸ்.!

 

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 65.55 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், 7.82 கோடி ரூபாய் சொத்து கணக்கு காட்டியுள்ளார். அவரது பெயரில் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும் கையிருப்பு ரூ.23 ஆயிரத்து 500, வங்கி இருப்பு ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698, ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424 மதிப்பில் 3 வாகனங்கள், ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 16 கிராம் நகைகள், பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் ரூ.100 பங்குத்தொகை என அசையும் சொத்துகளாக ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அவர் தனக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடன் உள்ளதாகவும், அது தனது மனைவியிடம் வாங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஸ்டாலின் சொத்து அதிகரிப்பு எவ்வளவு?

 

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையிருப்பு தொகையாக ரூ.50 ஆயிரமும், தனது மனைவி துர்கா ரூ.25 ஆயிரமும் கையிருப்பு வைத்திருக்கிறார்கள். துர்காவிடம் ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளது. மு.க.ஸ்டாலினிடம் ரூ.4 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 792 மதிப்பிலான அசையும் சொத்துகளும், துர்காவிடம் ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 854 மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

மு.க.ஸ்டாலின் பெயரில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 மதிப்பிலான அசையா சொத்துகளும், துர்காவிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் அசையும் சொத்து மதிபபு, 4 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. துர்காவுக்கு, 75 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில், அசையா சொத்துகளின் மதிப்பு, ஸ்டாலினுக்கு நான்கு லட்சம் ரூபாயும்; துர்காவுக்கு, 31 லட்சம் ரூபாயும் அதிகரித்துள்ளது. மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

உதயநிதி கார் மதிப்பு!

 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சொத்து பட்டியலில், கையிருப்பு தொகையாக ரூ.75 ஆயிரமும், மனைவி கிருத்திகாவின் கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் இருக்கிறது. தனது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளது என்று கூறியுள்ளார். ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

உதயநிதியிடம் உள்ள, ரேஞ்ச் ரோவர் காரின் கொள்முதல் விலை, 1.77 கோடி ரூபாய். தங்க நகைகள் எதுவுமில்லை; மனைவியிடம், 55.04 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.6 கிலோ பழைய தங்க நகைகள் உள்ளன

 

டிடிவி தினகரன்

 

கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அசையும் சொத்து, 19 லட்சத்து, 18 ஆயிரத்து, 485 ரூபாய். அசையா சொத்தாக, 57 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் உள்ளது. தினகரனின் மனைவி அனுராதாவிடம் அசையும் சொத்தாக, 7 கோடியே, 66 லட்சத்து 76 ஆயிரத்து 730, அசையா சொத்தாக, 2 கோடியே, 43 லட்சத்து, 76 ஆயிரத்து 317 உள்ளது.

 

 

மகள் ஜெயஹரிணி பெயரில், 12.26 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட, 28 கோடி அபராதம் உள்பட, 51 கோடியே 32 லட்சத்து 17 ஆயிரத்து 403 ரூபாய், அரசுக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

கமலுக்கு எவ்வளவு சொத்து?

 

கோவை தெற்கு தொகுதி வேட்பாளரான மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், தனக்கு, 177 கோடி ரூபாய்க்கு சொத்துகளும், 50 கோடி ரூபாய்க்கு கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கையிருப்பு, வங்கிகள் டிபாசிட் என, மொத்தம், 2 கோடியே, 43 லட்சத்து, 84 ஆயிரத்து, 563 ரூபாய். பங்குகள் மற்றும் முதலீட்டு பத்திரங்களாக, 26.11 கோடி, போஸ்டல், இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட வகையில், 2.40 கோடி, தனி நபர் கடன், அட்வான்ஸ், அறக்கட்டளை உள்ளிட்டவற்றில், 36.25 கோடி ரூபாய் இருப்பு.

 

 

கமல்ஹாசன் அசையா சொத்து மதிப்பு – 131 கோடியே, 84 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய். அசையும் சொத்து மதிப்பு – 45 கோடியே, 9 லட்சத்து, ஆயிரத்து, 476 ரூபாய் என, மொத்தம் – 176 கோடியே, 93 லட்சத்து, 46 ஆயிரத்து, 476 ரூபாய். கடன் தொகை – 49 கோடியே, 50 லட்சத்து, 11 ஆயிரத்து, 10 ரூபாய். கரூர், அரவக்குறிச்சி, துாத்துக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் என மூன்று வழக்குகள் உள்ளன.

 

சீமானின் ஆண்டு வருமானமே ரூ.1000!

 

சென்னை திருவொற்றியூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொத்து பட்டியலில், ‘சீமானின் பெயரில் ரூ.31 லட்சத்து 6 ஆயிரத்து 500 மதிப்பிலும், அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.63 லட்சத்து 35 ஆயிரத்து 31 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.

 

மேலும் கயல்விழி பெயரில் ரூ.31 லட்சம் அசையா சொத்துகளும் உள்ளன. வங்கிக்கடன் ரூ.6 லட்சம் உள்ளது. தொழில் அல்லது வேலை பற்றிய விவரங்களில், திரைப்பட இயக்குனர் மற்றும் விவசாயி என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். சீமான் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் 17 ஆகும்.

 

தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சென்ற 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon