--- --:--:-- --

வறுமையிலும் வளர்ந்து வரும் கிரிக்கெட்டர் கனவு..!

2

ராசிபுரம் அருகே தறி நெய்யும் தொழிலாளியின் மகனுக்கு மும்பை ரயில்வே கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ள சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் உலகில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அதற்கு விடா முயற்சி தேவைப்படுகிறது.

 

சிலரது குடும்ப சூழ்நிலை அவர்களின் கனவுக்கு பெரும் முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. வறுமையை தாண்டி திறமையை நம்பி பயணத்தை தொடர்ந்த சிலர் கிரிக்கெட் வானில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கடந்த பட்டியை சேர்ந்தவர் துரைசாமி.

 

இவர் அதே பகுதியில் தறி நெய்து வருகிறார். முன்புபோல் தறியால் நெய்த துணிகளுக்கு வரவேற்பு இல்லாததால் மிகுந்த குறைந்த வருமானம் ஈட்டி வருகிறார் துரைசாமி. அதனால் அவரது குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்து வருகிறது. துரைசாமி மகன் லோகேஷ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறான்.

 

சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம். பள்ளி நேரம் தவிர மீதி நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆர்வம்தான் லோகேஷை மாவட்ட போட்டிகளில் விளையாட செய்துள்ளது. கோவையில் நடைபெறும் கோவை கார்ப்பரேட் பிரீமியர் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார் லோகேஷ்.

 

அதனால் அவருக்கு ஆத்தூர் பிரீமியர் லீக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை கன கச்சிதமாக பயன்படுத்திய லோகேஷ் லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி பட்டத்தையும் வென்றார். தொடர்ந்து மும்பை கிரிக்கெட் அகாடமி அணியில் விளையாடிய தேர்வானார் லோகேஷ்.

 

24 லீக் ஆட்டத்தில் 832 ரன்கள் எடுத்த அவர் 46 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது மும்பை ரயில்வே அணியில் விளையாட தேர்வாகியுள்ளார் லோகேஷ். தங்கள் ஊரில் வளர்ந்துவரும் கிரிக்கெட் நட்சத்திரம் என்று ஊர் மக்கள் பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon