--- --:--:-- --

அதிகாரத்தை காட்டியதில்லை… பிறவிப்பயன் அடைந்துவிட்டேன்! ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் ‘பளிச்’!

Jayapradeep

ஒருபோதும் அதிகாரம் செலுத்தியதில்லை; எனக்கு அளித்த அன்பையும், ஆசீர்வாதங்களையும் கண்டு, இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக கருதுகிறேன் என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

 

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இன்னொரு மகன் ஜெயபிரதீப், தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அதே நேரம், வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்று, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

அவ்வகையில், கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டுமென்று, 200-க்கும் மேற்பட்ட விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், வேட்பாளர் நேர்காணல் எதிலும் ஜெயபிரதீப் பங்கேற்கவில்லை. போட்டி கடுமையாக இருக்கலாம் என்றும், வாரிசு அரசியல் என்ற சர்ச்சை ஏற்படும் என்றும் கருதி அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்றும், அத்துடன் தனது தந்தையின் வெற்றிக்காக அவர் உழைக்க வேண்டியுள்ளதாலும் அரசியல் ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

 

அதற்கு பதிலாக, தந்தைக்காக கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருப்பதி, திருச்செந்தூர், மதுரை என்று பல இடங்களில் தனது தந்தையின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகிறார். எனினும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஜெயபிரதீப்பை விடுவதாக இல்லை. வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துவித்து, ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 1991ம் ஆண்டில், 7 வயது சிறுவனாக இருந்த போது, அம்மாவின் பிரச்சாரத்தில் அதிமுக கொடி பிடித்து கலந்துகொண்டேன். கடந்த 30 வருடங்களாக கழகத்தின் உண்மை தொண்டராக பணியாற்றி வருகிறேன்.

 

கடந்த 2001ம் ஆண்டு முதல் அதிமுகவின் உறுப்பினராக 20 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். 2009ம் ஆண்டும் அம்மா வழங்கிய 16வது வார்டு இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி இருக்கிறேன். அம்மா அவர்களிடமும், கட்சி தலைவர்களிடமும், அமைச்சகள் பெருமக்களிடமும், கழக நிர்வாகிகளிடமும், எனக்கு பதவி தாருங்கள் என்று ஒருபோதும் கேட்டது கிடையாது. எனக்கென்று தனிக்கூட்டம்; தனி அணி என்று செயல்பட்டது கிடையாது.

 

மேலும், எந்த தேர்தலிலும் எனக்கென்று பதவிகேட்டு விருப்பமனு தாக்கல் செய்ததும் கிடையாது. எனக்கு நெருக்கமானவர்களின் அதிகாரத்தை ஒருமுறை கூட பயன்படுத்தியது இல்லை.

 

எனினும், ஒரு சாதாரண தொண்டரான என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்து, தமிழகம் முழுவதும் இருக்கும் எனது நண்பர்கள், கழக தொண்டர்கள், 200க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். உங்கள் அன்பு, ஆசீர்வாதங்களையும் கண்டு, இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon