திமுக அணியில் ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியானது ஆதி தமிழர் பேரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பல்லடம் தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது. அவிநாசியில், திமுக கூட்டணி சார்பில் ஆதித்தமிழர் பேரவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக 6 தொகுதிகளை பெற்றுள்ளது. எனினும், எந்தந்த தொகுதிகள் என்பதில் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை. நாளைக்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதிகள் விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் பட்டியல் வெளியாகும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே வி குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் இன்று அதிமுக வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் போக, இன்னமும் 12 தொகுதிகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யவில்லை. தாமகவுடன் இன்னமும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.





