டிடிவி உடன் ஓவைசி கூட்டணி.. இஸ்லாமிய வாக்குகள் பிரியுமா? கவலையில் திமுக!
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஓவைசியின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால், தனக்கு வரவேண்டிய இஸ்லாமிய ஓட்டுகள் பிரியுமோ என்ற கவலை, திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க, நாளொரு திருப்பம், பொழுதொரு கூட்டணி என, பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய பரபரப்பான சம்பவமாக பார்க்கப்படுவது, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமின் எனப்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கூட்டணி வைத்திருப்பது தான்.
ஆரம்பத்தில், ஓவைசி கட்சி தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முயற்சியில் திமுக இறங்கியது. இதனால், இஸ்லாமிய வாக்குகள் கொஞ்சமும் சிதறாமல் திமுகவுக்கு வந்து சேரும் என்று ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக, திமுகவின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் மஸ்தான், ஹைதராபாத்திற்கு சென்று ஓவைசி தரப்பை நேரில் சந்தித்து, திமுகவின் விருப்பத்தை தெரிவித்தார்.

அத்துடன், திமுகவின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஓவைசிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் இங்கு திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள இஸ்லாமிய கட்சிகளோ, ஓவைசியின் வருகையை விரும்பவில்லை; ஓவைசி மூக்கை நுழைத்தால் தங்களுக்கு சிக்கல் வரலாம் என்பதால், கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் விருப்பம் இல்லாமல் அந்த முடிவை திமுக கைவிட்டது.
அதை தொடர்ந்து, மூன்றாவது அணியை பலப்படுத்தும் வகையில் தனது அணியில் இணைக்க ஓவைசி தரப்பை, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அணுகினார். ஆனால், அது பலிக்கவில்லை. கடைசியில், சத்தம் போடாமல் சாதித்துவிட்டார் டிடிவி தினகரன். அவரது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மொத்தம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் எனவும், தற்போது 3 தொகுதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஓவைசி கட்சியின் தமிழக தலைவர் வக்கீல் அஹமது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அத்துடன், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனின் இந்த அதிரடி காய் நகர்த்தல்கள், ஏற்கனவே அமமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி, திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மற்றும் திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு வர வேண்டிய இஸ்லாமிய வாக்குகளை ஓவைசியின் கட்சி பிரித்து, திமுக வெற்றி வாய்ப்புக்கு ஆப்பு வைத்துவிடுவாரோ என்று, ஸ்டாலின் கவலையடைய ஆரம்பித்துள்ளார்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஐதராபாத் மக்களவை உறுப்பினரான ஓவைசி, அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சிகளை மிரள வைத்தார். தேசிய அளவில் இஸ்லாமிய தலைவராக உருவாகி வரும் ஓவைசி, தமிழகத்தில் அமமுகவோடு கரம் கோர்த்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் அவருக்கென ஒரு ஆதரவு உள்ளது.
எனவே, தமிழகத்திற்கு வந்து ஓவைசி பிரசாரம் செய்தால், திமுகவுக்கு வாக்கு என்ற இஸ்லாமியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். அந்த வகையில் பார்த்தால், ஓவைசி – டிடிவி தினகரன் கூட்டணி அமைத்திருப்பது, தமிழக தேர்தல் களத்தில் திமுகவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழக தேர்தல் களத்தில் ஓவைசி களம் பதித்திருப்பது ஆளும் அதிமுக வட்டாரத்தில் தெம்பை தந்துள்ளது. நிச்சயம் இது திமுகவுக்கு பலவீனம் என்ற வகையில் ஆளுங்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். அத்துடன், எதிர்காலத்தில் ஓவைசியை அதிமுக பக்கம் இழுக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அதிமுக கருதுகிறது.
ஓவைசியின் கட்சிக்கு இந்திய அளவில் பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக களம் காணும் ஓவைசி கட்சியின் பட்டம் தமிழகத்தில் பறக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




