பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் பணி..!
பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பணியை தொடக்கி வைக்கும் விதமாக தலைமை செயலகத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீதை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மக்கள் வீட்டிலிருந்தபடியே புகார்களை தெரிவிக்க ஏதுவாக 1100 என்ற இலவச தொலைபேசி சேவை எண்ணையும் முதல்வர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக 69 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சோழிங்கநல்லூரில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுகட்ட அகழாய்வு நிறைவடைந்து மணலூர், குந்தகை, அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கல்விப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
உள்துறை பொதுப்பணி நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, எரிசக்தி, வேளாண், சுகாதாரம், வருவாய், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கான கட்டடங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.






