7ம் தேதி சசிகலா வருகை… எடப்பாடிக்கு ஏழரை? கலகலக்குது அதிமுக!
வரும் 7ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா திரும்பும் சூழலில், இப்போதே அதிமுக கலகலக்கத் தொடங்கிவிட்டது. மூத்த அமைச்சர்கள் உள்பட பலரும் சசிகலா பக்கம் செல்வார்கள் என்று கூறப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்ட முயற்சிகல் நடப்பதாக வெளியாகும் செய்திகள், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து, ஜனவரி வரும் 27-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதற்கு முன்பாகவே சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஜனவரி 20-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் குணமடைந்த அவர், சில நாட்கள் தனிமையில் இருக்கும் பொருட்டு தற்போது பெங்களூருவிலேயே தங்கி உள்ளார். அவர், வரும் 7-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
சசிகலா மீண்டும் திரும்புவது, தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை தொற்றச் செய்துள்ளது. காரணம், ஆளும் அதிமுகவில் சசியின் எண்ட்ரி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்; அதன் மூலம் அதிமுக கலகலத்துப் போகும் என்ற பேச்சு நிலவுவதே ஆகும். குறிப்பாக, இதுவரை ஆட்சியையும் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, இனிமேல்தான் பெரும் நெருக்கடி காத்திருப்பதாக , அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததுமே, தமிழகத்தில் ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டுவதும், பின்னர் அவர்களை கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குவதுமாக தினமும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஆனால், சசிகலா சென்னை வந்ததும் அவரை மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இதுவரை பாஜகவின் தயவால் எந்த பிரச்சனையும் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மற்றும் அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்; அதனால், கட்சியும் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இனி அதிகாரமும் கையைவிட்டு போகப்போகிறது; அந்த சூழலில் தான், சசிகலாவும் வருவதுதான் இதில் டிவிஸ்ட் என்று, இலைக்கட்சியினரே முணுமுணுக்கின்றனர்.
அதிமுக விஷயத்தில் இதுவரை பாரதிய ஜனதா கட்சியின் விருப்பப்படியே எல்லாம் நடந்து வந்துள்ளது. இனியும் அப்படித்தான் நடக்கப் போகிறது. அதிமுக – அமமுகவை இணைக்க வேண்டும் – சசிகலா தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். ஆனால், சசி வந்தால் , எல்லா திட்டமும் பணால் என்றாகிவிடும் என்பது, முதல்வர் பழனிச்சாமிக்கு உள்ள பெரும் கவலையாகும்.
ஓ.பி.எஸ். பச்சைக்கொடி
இந்த விஷயத்தில், ஆரம்பத்தில் இருந்தே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பான இடத்தில் பாஜக நிழலில் ஒதுங்கிக் கொண்டார். அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், சமயம் பார்த்து எடப்பாடியை பழிவாங்க, ஓ.பி.எஸ்.சும் தயாராகிவிட்டதாகவும், சசி தலைமையை ஏற்க அவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக ரஜினியை பாஜக நம்பியிருந்தது. ரஜினி ஒதுங்கிக் கொண்டதால் இப்போது சசிகலா பக்கம் அக்கட்சி திரும்பி இருக்கிறது. பாஜகவின் கணக்கின்படி, கட்சி அதிகாரம் சசிகலா பக்கம், முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ்-ஐ அறிவிப்பது என்பதுதான் இப்போதுள்ள திட்டமாம். இதற்கு சசிகலா -தினகரன் தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.
இதை உறுதி செய்வது போல் மதுரையில் அமமுக நிர்வாகி மகேந்திரன் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், “எங்களுக்கு குறுகிய மனப்பான்மை கிடையாது. இப்போது பேசியவர்கள் முன்பு எப்படி பேசினார்கள், இப்போது எப்படி பேசினார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். அமமுக தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்களது ஒரே நோக்கம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான்” என்று சொல்லியிருக்கிறார்.
திமுக வரக்கூடாது, அதே நேரம் அதிமுகவும் சிதறிப் போய்விடக்கூடாது என்பதற்காக, எடப்பாடியை தவிர்த்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அரவணைத்துச் செல்ல சசிகலா – தினகரன் தரப்பு தயாராகவே இருப்பதால், இந்த களேபரங்களில் தனித்து விடப்பட்டிருப்பவர், முதல்வர் பழனிச்சாமி மட்டும்தான்.
ஜெயலலிதா சமாதியில் கையால் ஓங்கி அடித்து, சபதமெடுத்துவிட்டு பெங்களூருவுக்கு சென்ற சசிகலா, இப்போது தண்டனை முடித்து திரும்புகிறார். தனக்கு துரோகம் புரிந்தவர்களுக்கு எதிரான கோபக்கனலும், ஆவேசமும் இன்னமும் அவரிடம் இருக்கும். அதன் விளைவுகள் இனிமேதான் தெரியவரும். இதை எதிர்கொள்ள முன்வரிசையில் இருப்பவர்களில், முதல்வர் எடப்பாடிதான் முதன்மையானவர். அவரை இந்த தேர்தலோடு இருக்கும் இடம் தெரியாதபடி செய்துவிட வேண்டும் என்பது, சசி தரப்பு திட்டம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். எனவே, சசிகலா வெளியே வரும் 7ம் தேதிக்கு பிறகுதான், எடப்பாடிக்கு ஏழரை ஆரம்பம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இத்தனை நாள் தன்கூடவே இருந்து பணம், பதவி, பவிசு அனுபவித்தவர்கள் எல்லாம், அதிகாரம் கைவிட்டு போகும் நேரத்தில் தன்னையும் கைவிட்டால், அதோகதிதான். என்வே, பேசாமல் சசிகலாவுடன் சமாதானம் ஆகிவிடலாமா என்று எடப்பாடி யோசிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இன்னொரு தரப்போ, அப்படியெல்லாம் நடக்காது என்கிறார்கள்.

சிறைக்கு போகும்போது இருந்த சசிகலா வேறு, இப்போது இருக்கும் சசிகலா வேறு. பழைய பலம் அவரிடம் இல்லை; கணவர் நடராஜனோ, உத்தரவுகளை நிறைவேற்றும் உறவுக்கூட்டமோ இப்போது நெருக்கமாக இல்லை; தினகரன் மட்டுமே பக்கபலமாக இருக்கிறார். எனவே, அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா, முன்புபோல் தீவிரமாக இருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியானாலும், சசிகலாவின் வருகை அதிமுகவில் நிச்சயம் புயலை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் முடிவில் யார் கரை ஒதுங்குவார்கள், யாரை புயல் அடித்துச் செல்லும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தலில் சசிகலா போட்டி?

சிறை தண்டனையை சசிகலா நிறைவு செய்தாலும், விதிகளின் படி தேர்தலில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் போட்டியிட முடியாது. ஆனால், இந்த தடையை, சட்ட ரீதியாக உடைக்க சசி தரப்பினர் முயன்று வருகின்றனர்.
இதை அவர்கள் நம்பிக்கையுடன் செய்வதற்கு, சிக்கிம் அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங் விவகாரத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஊழல் வழக்கில் சிறை சென்ற அவர், 2018ஆம் ஆண்டில் வெளியே வந்தார். 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டதும், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பிரேம்சிங் தமாங் போட்டியிட அனுமதி தந்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரும் ஆனார் என்பது தனிக்கதை.
இதேபோல் சசிகலாவையும் தேர்தலில் நிற்க அனுமதி கேட்டு, மனு அளிக்க, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.








