ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு மற்றும் 2,500ரூபாய் விநியோகம்..!
தமிழக அரசு வழங்கும் 2500 ரூபாய் பணம் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இதுதவிர பச்சரிசி சர்க்கரை ஒரு கிலோ உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் துண்டு கரும்புக்கு பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக 5 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி ஒட்டு மொத்தமாக சுமார் 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வீடுவீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. கார்டுதாரர்கள், விரல்ரேகை கட்டாயம் இல்லை எனவும் கார்டு மற்றும் டோக்கன் கொண்டு வந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






