கோவை : நரிக்குறவ இன மக்கள் பாசத்துடன் அணிவித்த பாசி மாலையை மனமுவந்து பெற்றுக்கொண்ட கனிமொழி !!!
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பியுமான கனிமொழி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
முன்னதாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் திப்பாதேவி அம்மன் கோவிலில் மலைவாழ் மக்களிடையே கருத்துக்கேட்புக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆனைகட்டி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த பெண் சவீதா ( அரசுப்பள்ளியில் பயின்று தற்போது கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முதலாண்டு பயின்று வருகிறார் ) தங்களை போல் அடித்தட்டு மக்களும் மருத்துவம் பயில 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பெற்று தர போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும்,பணம் செலுத்தி தங்களால் பயில முடியாத நிலையில் திமுக நடத்திய போராட்டத்தின் விளைவாக தற்போது அரசே கல்விக்கட்டணத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் இது தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இதனை ஏற்றுக்கொண்ட கனிமொழி இன்னும் 5 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இதே நிலை தொடரும் எனவும் வாக்குறுதியளித்தார்.
அதனையடுத்து திம்மம்பாளையம் புதூர் பகுதியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம் தலைமையில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது,அங்கு வந்த நரிக்குறவ இன மக்கள் பாசத்துடன் அணிவித்த பாசி மாலையை மனமுவந்து பெற்றுக்கொண்டார்.அவர்களின் குழந்தைகளுடன் கைகளை குலுக்கி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர்,காரமடை பகுதியில் நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையிலும்,வீரபாண்டி பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு தலைமையிலும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது,பொதுமக்கள் மத்தியில் பேசிய பழனிச்சாமி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும்,தொழில் தொடங்க எவரும் வருவதில்லை என பேசினார்.மேலும்,பழனிச்சாமி ஸ்டாலினை பார்த்து அறிக்கை நாயகன் என கூறுகிறார்.சொல்லப்போனால் தளபதியின் அறிக்கையால் தான் தமிழ்நாட்டில் அரசாங்கமே நடக்கிறது.அதை வைத்து தான் ஆட்சியை எடப்பாடி நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இன்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்து தளபதி ஆட்சியை நடத்துகிறார்.இன்னும் 5 மாதங்களுக்கு பிறகு முதல்வராக ஆட்சியை நடத்துவார்.அப்போது,கலைஞர் ஆட்சியில் இருந்ததை போல் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,தொழில் முதலீடுகள் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்,பழனிச்சாமி என்று ஊர் பெயரை குறிப்பிடாமல் அழைப்பதற்கு காரணம் உண்டு.எதற்கு ஓர் ஊர் பெயரை கெடுக்க வேண்டும் எனவும்,அவர் ஊருக்கே அவர் ஒன்றும் செய்யவில்லை.தேர்தலில் அங்கு நின்றாலே அவர் ஜெயிக்க மாட்டார் எனவும் ஆரூடம் தெரிவித்தார்.மேலும்,எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அடிக்கல் நாட்டி போட்டோ எடுத்துக்கொள்வதோடு சரி.பணிகளை முடித்ததாக சரித்திரமே கிடையாது.
ஒரு ஆட்சி காட்சியாக மட்டுமே இருக்கக்கூடிய ஆட்சி இது.மோடியிடமும்,அமித் ஷாவிடமும் தமிழ்நாட்டை அடகு வைக்க துடிக்கும் அதிமுக ஆட்சியை தூக்கியெறிவோம்.தலைநிமிர்ந்து தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும்,எல்லா மக்களுக்கும் சமநீதி கிடைக்கவும் திமுகவிற்கு வாக்களியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏ.சி.ஆர்.ராமச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஷ்ரப் அலி,காரமடை ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.






