--- --:--:-- --

கோவை மாவட்டத்தில் தொடர்கதையாகி வரும் யானைகள் இறப்பு..!

6.3

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திகுட்டையில் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் வாழை விவசாயம் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு அங்குள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை முருகேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தியுள்ளது.

 

பின்னர்,தோட்டத்தினை கடந்து மற்றொரு வனப்பகுதிக்குள் நுழைய முற்பட்ட பொழுது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை யானை உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சட்டவிரோத மின்வேலி குறித்து ஆய்வு செய்து தோட்ட உரிமையாளரான முருகேசன் என்பவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon