தெலுங்கானாவுக்கு வெள்ள நிவாரணப் பணிக்கு தமிழ்நாடு சார்பாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது..!
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு சார்பாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுவரை இல்லாத கனமழை மற்றும் வெள்ளத்தால் ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் தெலுங்கானா அரசு மற்றும் மக்களுடன் தமிழ்நாடு மக்கள் துணை நிற்பதாக கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
தெலுங்கானாவுக்கு தமிழகத்தின் ஆதரவுக்கு அடையாளமாக வெள்ள நிவாரண பணிகளுக்கு 10 கோடி ரூபாயை தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே தெலுங்கானாவுக்கு உதவிய தமிழகத்துக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.






