ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படுகின்றன..!
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்படுகின்றன. அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய விமானப்படையின் போர் திறனை மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் வந்தடைந்து அந்தப் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு விட்டன.
அவற்றை முறைப்படி விமானப் படையில் இணைக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், பாதுகாப்புத்துறை செயலாளர் அஜயக்குமார், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஆகிய பலர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் ரபேல் விமானம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு சர்வ தர்மம் பூஜை நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றுக்குப் பிறகு இந்திய பிரான்ஸ் தூது குழுக்களின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.







