வெப்ப சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







