பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறிப் பட்டு புதுமையான ரகங்கள் அறிமுகம். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி தொழிலை மேம்படுத்த நெசவாளர்கள் நடவடிக்கை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமான கைத்தறிப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.இங்கு உற்பத்தியாகும் கைத்தறிப்பட்டுப் புடவைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் முற்றிலும் விற்பனை முடங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில மாதங்களாக உற்பத்தி விலைக்கே கைத்தறிப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்களை கவரும் வகையில் முகூர்த்தப் புடவைகள்,மென்பட்டு புடவைகள் பல்வேறு வண்ணங்களில் பல புதிய ரகங்களில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நெசவாளர்களின் வாழ்வு புத்துணர்வு பெறும் என்று பட்டு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் குமார், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் காரப்பன் சில்க்ஸ் தண்டபாணி, துணைச்செயலாளர் பிரகாஷ், இணை செயலாளர் சுந்தரமூர்த்தி, கெளரவ ஆலோசகர் பெருமாள் சாமி, செய்தித் தொடர்பாளர் விமலராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளிங்கிரி, பழனிச்சாமி, நாகேந்திரன், நாகராஜ், தர்மராஜ், தண்டபாணி, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






