--- --:--:-- --

புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக மோடி உரை..!

9

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் உயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

 

இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கை நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். மூன்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தி புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் மாணவர்கள் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும் கூறினார்.

 

பன்னாட்டு அளவில் இந்திய மாணவர்கள் தகுதி பெறவும் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளவும் புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கும் என்று மோடி கூறியுள்ளார். பேசும் மொழியில் பாடங்கள் படிப்பதால் கற்கும் திறன் மேம்படும் என்பதால் பள்ளிக் கல்வியை ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கற்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

 

அண்மை காலமாக ஆர்வம் மற்றும் கற்பனைத்திறன் மாணவர்களிடம் மறைந்து கூட்டத்தோடு கூட்டமாக கலக்கும் மனப்பான்மை அதிகரித்து விட்டதாக அவர் கவலை தெரிவித்தார். ஆகையால் மாணவர்கள் மத்தியில் சிந்தனையை வளர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மோடி கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை மூலம் ஆசிரியர்களும் கற்கும் திறன் பெறுவதாக குறிப்பிட்ட அவர் இதனால் இந்தியா வேகமாக முன்னேறிச் செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon